கடலூரில் ரவுடி சாவு ‘என் கணவரை போலீசார் அடித்துக் கொன்று விட்டனர்’ - நீதிபதியிடம் மனைவி புகார்
கடலூரில் ரவுடி இறந்தது பற்றி அவரது மனைவி நீதிபதியிடம், தன்னுடைய கணவரை போலீசார் அடித்துக் கொலை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
கடலூர்,
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகன் ஏழுமலை என்கிற மைக்கேல் (வயது 36). ரவுடி. இவர் பிரபல ரவுடியான தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.
கடந்த 15-ந்தேதி கொலை முயற்சி வழக்கில் ஏழுமலையை ஆரோவில் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி உடல் நலம் சரியில்லாமல் திடீரென அவர் உயிரிழந்து விட்டார்.
இதையடுத்து ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக கடலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இது பற்றி கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆனால் ஏழுமலையின் உடலை பார்க்க அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கலும், காலதாமதமும் ஏற்பட்டது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு (ஜனவரி) தள்ளி வைத்துள்ளது.
இதற்கிடையில் ஏழுமலை இறந்து நேற்றுடன் 4-வது நாள் ஆன நிலையில் அவரது மனைவி கோமதி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஏழுமலை கடலூர் மத்திய சிறையில் இறந்ததாக புகார் கூறப்பட்டதால், இது பற்றி விசாரணை நடத்த கடலூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்வர்சதாத் அரசு மருத்துவமனை பிணவறைக்கு வந்தார்.
தொடர்ந்து அவர் ஏழுமலையின் மனைவி கோமதி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதியிடம் ஏழுமலை மனைவி கோமதி புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 14-ந்தேதி நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 கார்களில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் வந்து, என்னுடைய கணவரை தாக்கினர். இதை தடுத்த என்னையும், என் குழந்தைகளையும் அடித்தனர்.
பின்னர் என்னுடைய கணவர் ஏழுமலையை மட்டும் போலீசார் அழைத்து சென்று விட்டனர். இது பற்றி நான் விசாரித்த போது, ஆரோவில் போலீசார் உண்மையை சொல்லவில்லை. அதன்பிறகு தான் என்னுடைய கணவரை போலீசார் சரமாரியாக தாக்கி, கை, கால்களை உடைத்தது தெரிய வந்தது. ஆனால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்காமல், வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் சென்றுள்ளனர்.
அங்கு நீதிபதி இல்லாததால், செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் என் கணவரை ஆரோவில் போலீசார் வற்புறுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் போலீசார் ஏற்கனவே தாக்கியதால் அவர் சிறையில் இறந்து விட்டார். அவரை போலீசார் அடித்துக்கொலை செய்து விட்டனர். ஆகவே என்னுடைய கணவரை தாக்கிய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் இழப்பீடாக அரசிடம் இருந்தும், போலீசாரிடம் இருந்தும் ரூ.50 லட்சம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோமதி கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்ற நீதிபதி, இது பற்றியும் விசாரித்தார். அப்போது ஏழுமலையின் கை, கால்களை போலீசார் உடைத்ததாக அவரது மனைவி கோமதி கூறியதால், ஏழுமலையின் உடலை எக்ஸ்ரே எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ஏழுமலை உடலை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்தனர். அதையடுத்து ஏழுமலை உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு நீதிபதி முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் ஏழுமலை உடலை 4-வது நாளான நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஏழுமலையின் உடல், கோமதியின் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக புகார் மனுவை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கோமதி, தன்னுடைய வக்கீல்கள் சுந்தர், வினோத், திருமேனி ஆகியோருடன் சென்று அளித்தார். பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் கடலூர் அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story