மழைநீரை சேமிக்கும் வகையில் பல்லாவரம் கச்சேரிமலை கல்குட்டையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


மழைநீரை சேமிக்கும் வகையில் பல்லாவரம் கச்சேரிமலை கல்குட்டையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2018 11:40 PM GMT (Updated: 20 Dec 2018 11:40 PM GMT)

கழிவுநீரால் நிரம்பி கிடக்கும் பல்லாவரம் கச்சேரிமலை கல்குட்டையை மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாம்பரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தைபோக்க இயற்கை அளித்துள்ள நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீரை பெற அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ஏராளமான கல்குவாரிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

கல்குவாரிகளில் தேங்கி உள்ள தண்ணீரை கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வகையில் கடந்த கோடை காலத்தில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்து, சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வெற்றிகரமாக வினியோகம் செய்யப்பட்டது.

கச்சேரிமலை கல்குட்டை

சென்னை புறநகர் பகுதியில் உள்ள அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியில் உள்ள கல் குவாரி குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுத்து அவற்றை சுத்திகரித்து பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் 2 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சேரிமலை கல்குட்டை சுமார் 150 அடி ஆழம் கொண்டது. இந்த கல்குட்டையில் மழை காலத்தில் தேங்கிய தண்ணீர் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் துணி துவைக்கவும், குளித்தும் வந்தனர்.

கழிவுநீர் குட்டையானது

ஆனால் அதை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. இந்த பகுதியில் கச்சேரிமலை கல்குட்டை அருகில் இருந்த ஏரி மாயமாய் மறைந்து, அந்த பகுதியில் குடியிருப்புகள் வந்துவிட்டன. பழைய பல்லாவரம் பெரிய மலையில் இருந்து மழை காலத்தில் வரும் மழைநீர் இந்த கல்குவாரி குட்டையில் தேங்கி வந்தது.

தற்போது கல்குட்டையை சுற்றி ஏற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதுமாக கல்குட்டையில் விடப்படுவதால் கடந்த 15 ஆண்டுகளில் கச்சேரிமலை கல்குட்டை முழுவதுமாக கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாற்றப்பட்டுவிட்டது.

கச்சேரிமலை குட்டையில் தேங்கி உள்ள கழிவுநீரால் பல்லாவரம் நகராட்சி 11 மற்றும் 12-வது வார்டில் உள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் கெட்டு வருகிறது. மழைவெள்ள காலங்களில் கச்சேரிமலை கல்குட்டை நிரம்பி அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீரோடு கலந்து குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் ஒவ்வொரு மழை காலத்திலும் பொதுமக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

கச்சேரிமலை கல்குட்டையில் உள்ள தண்ணீரை அறிவியல் ரீதியில் சுத்திகரித்து, அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குட்டையில் கலப்பதை தடுக்க வேண்டும். குட்டையை சீரமைத்து மழைநீரை சேமிக்கும் வகையில் சிறந்த நீர்ஆதாரமாக கச்சேரிமலை கல்குட்டையை மாற்றவேண்டும் என ஜமீன் பல்லாவரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பல்லாவரம் நகராட்சிக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் ரூ.99 கோடியே 95 லட்சத்தில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்லாவரம் நகராட்சிக்கு தினமும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து, வரும் மார்ச் மாதம் குடிநீர் வினியோகம் தொடங்க உள்ளது.

உரிய நடவடிக்கை

இதேபோல ரூ.40 கோடியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குழாய் லைன்களை அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தினமும் 55 லட்சம் லிட்டர் குடிநீர் பல்லாவரம் நகராட்சி பகுதிக்கு வினியோகம் செய்யப்படும்.

பொதுமக்கள் கோரிக்கையின்படி கச்சேரிமலை கல்குட்டையை சீரமைத்து, அதை நீர்ஆதாரமாக மாற்றுவது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் எந்த நகராட்சியிலும் குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இருக்கும் நீர் ஆதாரத்தை அழிவு பாதையில் இருந்து மீட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். அதை பல்லாவரம் நகராட்சி விரைவாக செய்யவேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி ஜமீன் பல்லாவரம் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Next Story