மின்வேலியில் சிக்கி தந்தை– மகன் சாவு: விவசாயிக்கு 7 ஆண்டு சிறை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
மின்வேலியில் சிக்கி தந்தை– மகன் பலியான சம்பவத்தால் விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை சேர்ந்த சர்வேயர் மணி என்பவரின் மனைவி தினகரி பெயரில் வேட்டவலம் அருகே கீரனூர் கொல்லகொட்டாய் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வேளானந்தல் பகுதியை சேர்ந்த விவசாயி ஜோக்கர் என்ற சுப்புராயன் (வயது 45) என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
கடந்த 2008–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ந் தேதி சுப்புராயன் கீரனூர் கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்த முருகனிடம் நிலத்தில் உள்ள நெல்மூட்டைகளை எடுத்து கொண்டு திருவண்ணாமலை கமிட்டி அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து முருகன் மாட்டு வண்டியில் தனது மகன் சக்திவேலுடன் நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர்கள் மாட்டு வண்டியில் நெல்மூட்டைகளை ஏற்றி கொண்டு நள்ளிரவு அங்கிருந்து வந்தனர்.
நிலத்தை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால், நிலத்தை சுற்றி திருட்டுத்தனமாக மின்வேலியை சுப்புராயன் அமைத்து இருந்தார். அந்த மின்வேலியில் நெல் மூட்டை ஏற்றி வந்த மாட்டு வண்டி ஏறியுள்ளது. இதனால் மாட்டு வண்டியில் இருந்த 2 மாடுகளும், முருகன் மற்றும் சக்திவேல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புராயனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து தந்தை மற்றும் மகன், மாடுகள் இறந்த குற்றத்திற்காக சுப்புராயனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.