சாவில் சந்தேகம் என தாய் புகார் அரசு ஊழியர் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
நம்பியூரில் அரசு ஊழியர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து அரசு ஊழியரின் உடலை தோண்டி எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.
நம்பியூர்,
நம்பியூர் சி.எஸ்.ஐ. வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 59). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருடைய தாய் குழந்தையம்மாள். இவர் கெடாரையில் வசித்து வருகிறார். ராஜசேகர் கடந்த மாதம் 8-ந் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் மறுநாள் காலையில் உறவினர்கள் எழுந்து பார்த்தபோது ராஜசேகர் இறந்து கிடந்தார்.
இதைத்தொடர்ந்து அவருடைய உடலை உறவினர்கள் எடுத்து சென்று கெடாரையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர். இதுபற்றி அறிந்த நம்பியூர் கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் அரசுஊழியர் ராஜசேகர் உடலை வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தெரியாமல் உறவினர்கள் புதைத்துவிட்டதாக நம்பியூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ராஜசேகரின் உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜசேகரின் தாய் குழந்தையம்மாள், நம்பியூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்தப்புகாரில், ‘எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே பிணத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதைத்தொடர்ந்து பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நந்தகுமார், நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரி ஆகியோர் ராஜசேகர் உடல் புதைக்கப்பட்ட கெடாரையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்துக்கு நேற்று காலை சென்றனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் நம்பியூர் போலீசார் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து அவரது உடற்கூறுகளின் சில பாகங்கள் ரசாயன பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இவைகள் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனையின் முடிவில் தான் ராஜசேகர் எப்படி இறந்தார்? என தெரிய வரும். 1 மாதத்துக்கு பிறகு அரசு ஊழியர் பிணம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story