கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை - 175 பேர் கைது


கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை - 175 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 5:46 PM GMT)

கடலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 175 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பயனுள்ள கணினி மற்றும் இணையதள வசதி செய்து தர வேண்டும், இ-அடங்கல் திட்டத்தில் அடங்கல் வழங்கும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும், மாவட்ட மாறுதலை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று 12-வது நாளாக இவர்களது வேலை நிறுத்தம் நீடித்தது. இதில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். அதன்படி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் ரவி உள்பட 175 கிராம நிர்வாக அலுவலர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story