பெண்ணாடத்தில் ஷோரூமில் டி.வி. திருடிய பெண்கள் உள்பட 3 பேர் கைது - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் சிக்கினர்
பெண்ணாடத்தில் உள்ள ஷோரூமில் டி.வி. திருடிய 2 பெண்கள் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் அவர்கள் சிக்கினார்கள்.
பெண்ணாடம்,
பெண்ணாடத்தை சேர்ந்தவர் ராம்மோகன்(வயது 47). இவர் பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே டி.வி., மிக்சி, பேன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் கடைக்கு வந்தனர். அவர்கள் எல்.இ.டி. டி.வி.க்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது கடை ஊழியர்கள் அவர்களுக்கு டி.வி.குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தனர். இதில் ஒரு பெண் மட்டும் அங்கிருந்து விலகி வேறொரு இடத்துக்கு சென்றார். பின்னர் 3 பேரும் டி.வி. வாங்காமல் கடையில் இருந்து புறப்பட்டனர்.
இதையடுத்து கடை ஊழியர்கள் டி.வி.யை சரிபார்த்தபோது அதில் ஒரு டி.வி.யை மட்டும் காணவில்லை. இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சரிபார்த்தனர். அதில் ஒரு பெண், தனது சேலைக்குள் சிறிய வகையிலான ஒரு எல்.இ.டி. டி.வி.யை மறைத்து வைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ராம்மோகன் பெண்ணாடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் உட்கோட்ட கண்காணிப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் சங்கர்(45), ரமேஷ் மனைவி கல்பனா(40), அருமைராஜ் மனைவி கற்பகம்(40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தண்டலை கிராமத்துக்கு விரைந்து சென்று அங்கு இருந்த சங்கர், கல்பனா, கற்பகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த டி.வி. மற்றும் பல்வேறு ஜவுளிகடைகளில் திருடிய புதிய துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அரியலூர், ஜெயங்கொண்டம், பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், கூட்ட நெரிசல்கள் உள்ள கடைகளுக்கு சென்று அங்குள்ள பொருட்களை திருடி வருவதையே தொழிலாக இவர்கள் செய்து வந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story