வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம்  கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 6:32 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

விஜயா வங்கி, தேனா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது. பிராந்திய கிராம வங்கிகளை இணைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் காலதாமதம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று பணிக்கு போகாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் பணியில் இல்லாததால் அடைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை.

வங்கிகளுக்கு நேரில் வந்து பண பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களும், வியாபாரிகளும் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால் ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம், பணம் போடும் எந்திரம் ஆகியவை வழக்கம் போல் இயங்கின. இதனால் அங்கு அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தும், பணம் போடும் எந்திரம் மூலம் பண பரிவர்த்தனை செய்ததையும் காணமுடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரிகளின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று மட்டும் வங்கிகளில் கோடிக்கணக்கான அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 44 அரசு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் வங்கிகளின் செயல்பாடு மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களின் பயன்பாடு காரணமாக பாதிப்புகள் பெரிதாக காணப்படவில்லை. சிலர் வங்கி வேலை நிறுத்தம் தெரியாமல் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Next Story