கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வட்ட துணை தலைவர்கள் அரிச்சந்திரன், ஜெயராமன், துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

செந்துறை நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் வட்டத்தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சாலை பணியாளர்கள் சங்க உட்கோட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் மற்றொரு சுப்பிரமணியன், பொருளாளர் கருணாநிதி, ஓய்வுபெற்ற அலுவலர் சங்க பொறுப்பாளர் ஆளவந்தார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ராமநாயகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் அம்மாசி தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story