ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா


ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா
x
தினத்தந்தி 22 Dec 2018 3:45 AM IST (Updated: 22 Dec 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் நடந்த மனநல மறுவாழ்வு மைய திறப்பு விழாவில் 2 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் நடந்த மனநல மறுவாழ்வு மைய திறப்பு விழாவில் 2 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மனநல மறுவாழ்வு மையம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவில் வளாகத்தில் அரசு மக்கள் நலவாழ்வு துறை சார்பில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். தூத்துக்குடி நெல்லை ஆவின்பால் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல மெஞ்ஞானபுரம் பங்கு தந்தை குழந்தைராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் மனநல மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பேசும் போது கூறியதாவது;-

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயம், மனநல பாதிக்கப்பட்டவர்களின் தெய்வீக பூமியாக இருந்து வருகிறது. இங்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் தொழிற்பயிற்சி அளிப்பதற்காக இந்த மனநல மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அடிப்படை வசதிகள்

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது, தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகழிடமாக புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் செயல்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு சார்பில் புளியம்பட்டியில் கடந்த ஆண்டு முதல் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக ரூ.52 லட்சம் செலவில் மனநல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பகுதியில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ரூ.70 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட உள்ளது. இந்த மறுவாழ்வு மையம் அரசு மக்கள் நலவாழ்வு மையம் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

யார்-யார்?

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதாசெரின், கோவில்பட்டி மருத்துவ பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா, மாவட்ட மனநல மருத்துவர் சுவாதி லட்சுமி, தூத்துக்குடி சிறப்பு மனநல மருத்துவர் சிவசைலம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ், யூனியன் ஆணையாளர் நவநீதகிருஷ்ணன், கூடுதல் யூனியன் ஆணையாளர் இசக்கியப்பன், ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவர் டாக்டர் தங்கமணி, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜோசெரின், பசுவந்தனை சதீஷ், புளியம்பட்டி ஊராட்சி செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டர். முடிவில் புளியம்பட்டி பங்கு தந்தை பிரான்சிஸ் நன்றி கூறினார்.

Next Story