மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு


மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2018 3:45 AM IST (Updated: 22 Dec 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம், 

விஜயா வங்கி, தேனா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது, பிராந்திய கிராம வங்கிகளை இணைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 20 பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் செயல்படாத காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனை செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் முன்பு வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் சி.பாலாஜி தலைமை தாங்கினார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆர்.பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆர்.பாலாஜி கூறும் போது, ‘கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் வங்கி அதிகாரிகள் இன்று (நேற்று) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் சுமார் ரூ.5,500 கோடி வரை பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 3,300 வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.300 கோடி வரை பணபரிவர்த்தனை பாதிக்கப்படும்‘ என்றார்.

Next Story