மாணவர்களை குறி வைத்து ‘மை லேடீஸ் பூங்காவில்’ செல்போன்கள் பறிப்பு சமூக விரோத கும்பல் அட்டூழியம்


மாணவர்களை குறி வைத்து ‘மை லேடீஸ் பூங்காவில்’ செல்போன்கள் பறிப்பு சமூக விரோத கும்பல் அட்டூழியம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ‘மை லேடீஸ் பூங்கா’வில் மாணவர்களை குறி வைத்து செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சென்னை,

சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் அருகே மாநகராட்சி பராமரிப்பின் கீழ் ‘மை லேடீஸ் பூங்கா’ இருந்து வருகிறது.

இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பலர் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிலர் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பகல் வேளைகளில் கல்லூரி மாணவ-மாணவிகள், காதல்ஜோடிகளும் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். அப்போது பலர் செல்போனில் உரையாடுகின்றனர். ‘வாட்ஸ்-அப்’பையும் பயன்படுத்துகின்றனர்.

செல்போன் பறிப்பு

இந்தநிலையில் கஞ்சா, மது போதையில் சில சமூக விரோதிகள் பூங்காவில் நடமாடி வருகின்றனர். அவர்கள் செல்போன் வைத்திருக்கும் மாணவர்களை குறி வைத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் மிரட்டி செல்போனை தரும்படி கேட்கிறார்கள். தர மறுப்பவர்களை அடித்து உதைத்து செல்போனை பிடுங்குகிறார்கள்.

இதுபற்றி போலீசில் புகார் அளித்தாலோ? அல்லது வெளியில் யாரிடமும் சொன்னாலோ? கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் பயந்துபோய் செல்போனை பறிகொடுக்கும் நபர்கள் வெளியே சொல்வது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா

இதுதொடர்பாக ‘மை லேடீஸ் பூங்கா’வுக்கு தினமும் நடைபயிற்சியில் ஈடுபட்டு வரும் ஒருவர் கூறியதாவது:-

நான் பல ஆண்டுகளாக இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சமீப காலமாக பூங்கா முறையான பராமரிப்பின்றி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் உலாவும் இடமாக மாறி உள்ளது.

இந்தநிலையில் சமூக விரோத கும்பலின் அட்டூழியமும் தலைத் தூக்கி உள்ளது. தினமும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து செல்போன்கள் பறிக்கப்படுகின்றன.செல்போனை பறிக்கொடுக்கும் மாணவர்கள் கண்ணீரும், கவலையுமாக செல்வதை நான் பல முறை பார்த்து இருக்கிறேன். எனவே இவ்விவகாரத்தில் போலீசார் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காவுக்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சமூக விரோத கும்பலை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story