பொள்ளாச்சி ஆராதனா ஆஸ்பத்திரியில் இருந்து பாதி சிகிச்சையில் வெளியே அனுப்பியதாக தனியார் நிறுவன ஊழியர் புகார்


பொள்ளாச்சி ஆராதனா ஆஸ்பத்திரியில் இருந்து பாதி சிகிச்சையில் வெளியே அனுப்பியதாக தனியார் நிறுவன ஊழியர் புகார்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 8:47 PM GMT)

பொள்ளாச்சி ஆராதனா ஆஸ்பத்திரியில் இருந்து தனியார் நிறுவன ஊழியரை பாதி சிகிச்சையில் வெளியே அனுப்பியதாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஓரக்களியூரை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கையில் ஊசி குத்தப்பட்ட நிலையில் குளுக்கோஸ் பாட்டிலுடன் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்தார். சப்- கலெக்டர் இல்லாததால் அங்கிருந்த அலுவலர்களிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஓரக்களியூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். கடந்த 19-ந்தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றேன். பின்னர் அவரது பரிந்துரையின் பேரில் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஆராதனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் என்னை எனது மகன் பிரதீப்ராஜ் 20-ந்தேதி (நேற்று முன்தினம்) இருசக்கர வாகனத்தில் பார்க்க வந்தார்.

பின்னர் என்னை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற போது, அது காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் சண்முகசுந்தரத்திடம் தெரிவித்ததற்கு, அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வந்த என்னை உடனடியாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அதற்கு நான் , உடல்நிலை சரியில்லாத என்னை வெளியேற்றினால், மேலும் எனது உடல்நிலை பாதிக்கும். எனவே சிகிச்சையை தொடருமாறு கூறினேன். ஆனால் வலுக்கட்டாயமாக என்னை வெளியேற்றி விட்டனர். நடந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். அப்போது போலீசார் இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து மட்டுமே வழக்குபதிவு செய்ய முடியும் என்றும், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார்கள். எனவே உடல்நிலை பாதிப்பில் இருந்த என்னை வெளியேற்றிய ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காணாமல் போன இருசக்கர வாகனத்தையும் கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story