வயல்கள் வழியாக உயர்கோபுர மின்பாதை அமைக்க எதிர்ப்பு; அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை


வயல்கள் வழியாக உயர்கோபுர மின்பாதை அமைக்க எதிர்ப்பு; அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Dec 2018 3:27 AM IST (Updated: 22 Dec 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் அருகே வயல்கள் வழியாக உயர்கோபுர மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே புகளூரில் இருந்து திருவளம் வரை வயல்கள் வழியாக உயர்கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உப்பிலியபுரம் பகுதியில் மங்கப்பட்டி, மங்கப்பட்டிபுதூர், டி.முருங்கப்பட்டி, டி.பாதர்பேட்டை, வெள்ளாளப்பட்டி, முத்தையம்பாளையம், நல்லமாத்திகோம்பை, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, ருத்ராச்சகோம்பை ஆகிய கிராமங்களில் இப்பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் உப்பிலியபுரம் அருகே உள்ள நாகநல்லூர் கிராமத்தில் உயர்கோபுர மின் பாதை அமைக்கும் பணிக்கு நில அளவை செய்ய நேற்று துறையூர் தாசில்தார் ரவிசங்கர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராதா, கிராம நிர்வாக அலுவலர் தீபா, நில அளவைத்துறை அதிகாரிகள், உயர்கோபுர மின்பாதை அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்தனர்.

இதை அறிந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் நடராஜன், மோகன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் தங்கள் வயல்களில் காத்திருந்தார்கள். அவர்கள், அங்கு வந்த அதிகாரிகளிடம், வயல்கள் வழியாக உயர்கோபுர மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை வயலில் இறங்கவிடாமல் மறித்து முற்றுகையிட்டனர்.

இதனால் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் வந்து பணிகளை தொடங்குவதாக அதிகாரிகள் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நாகநல்லூர் கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story