ஒரகடம் அருகே கண்ணாடி கதவுகள் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்தது டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்


ஒரகடம் அருகே கண்ணாடி கதவுகள் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்தது டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 22 Dec 2018 3:43 AM IST (Updated: 22 Dec 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே கண்ணாடி கதவுகள் ஏற்றி வந்த மினி டெம்போ கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.

படப்பை,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). இவர் வேலூர் ராணிப்பேட்டையில் இருந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி கதவுகளை ஏற்றிக்கொண்டு மினி டெம்போவை ஓட்டிக்கொண்டு சென்னை கேளம்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார். டெம்போவில் தொழிலாளிகள் 2 பேர் இருந்தனர். டெம்போ வண்டலூர்-வாலாஜாபாத் சாலை ஒரகடத்தை அடுத்த பணப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திரும்பியது.

அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வெங்கடேஷ் பிரேக் பிடித்தார். அப்போது டெம்போ நிலை தடுமாறி கவிழ்ந்தது.

காயமின்றி தப்பினர்

அதில் இருந்த கண்ணாடி கதவுகள் உடைந்து சாலையில் சிதறியது. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து நின்றன. டெம்போ கவிழ்ந்ததை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக டெம்போவின் உள்ளே சிக்கிய டிரைவர் உள்பட 3 பேரையும் மீட்டனர். இதில் டிரைவர் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சாலையில் உடைந்து கிடந்த கண்ணாடி கதவுகளை அப்புறப்படுத்தினர். பின்னர் கவிழ்ந்து கிடந்த டெம்போவை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

Next Story