பல்லடம் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது - 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பறிமுதல்


பல்லடம் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது - 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 11:13 PM GMT)

பல்லடம் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன்நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லடம், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்தது. மேலும் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து அவர்கள், அணிந்து இருக்கும் நகைகளையும் மர்ம ஆசாமிகள் பறித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கரைப்புதூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம், அண்ணாநகரை சேர்ந்த கண்ணன், பனிக்கம்பட்டியை சேர்ந்த குகன் மற்றும் அவரப்பாளையத்தை சேர்ந்த மகாதேவன் ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். அதுபோல் மங்கலம் இடுவாய் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின், ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்த ஜெயந்தி ஆகியோர் தனியாக செல்லும் போது அவர்கள் அணிந்து இருந்த தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

இந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சரோஜினி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்பிரபு, ஏசுதுரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் தண்ணீர் பந்தல் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுத்துநிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். தொடர் விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் சூலூர் வாகராயம்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சங்கர் என்கிற கருப்புசாமி (வயது 27), அதே பகுதியை சேர்ந்த அச்சு என்கிற சுரேஷ் (29) என தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும், இவர்களது நண்பரான வாகராயம்பாளையம் திருவள்ளூர் வீதியை சேர்ந்த சதீஸ்குமார் (30) என்பவருடன் சேர்ந்து அய்யம்பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம், அண்ணாநகரை சேர்ந்த கண்ணன், பனிக்கம்பட்டியை சேர்ந்த குகன், அவரப்பாளையத்தை சேர்ந்த மகாதேவன் ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் ஜெயந்தி, ஜாஸ்மின் ஆகியோர் தனியாக சென்றபோது அவர்கள் அணிந்து இருந்த நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கருப்புசாமி மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கூறிய தகவல் அடிப்படையில் சூலூர் வாகராயம்பாளையம் திருவள்ளுவர் வீதிக்கு சென்று சதீஸ்குமாரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து ஜிமிக்கி கம்மல், மோதிரம், செயின் என மொத்தம் 45 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதை தவிர 2 கிலோ வெள்ளி, 4 மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி 2 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பல்லடம் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story