எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 400 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்


எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 400 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்
x
தினத்தந்தி 22 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-22T21:52:04+05:30)

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 400 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்.

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்சில் எம்.ஆர்.சி.(மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்) ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவ முகாமில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களில் இருந்து ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 46 வாரங்கள் போர் ஆயுதங்களை கையாளும் முறை உள்பட பல்வேறு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. பயிற்சி முடித்த வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு, நாட்டின் பல்வேறு எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதன்படி தற்போது 46 வாரங்கள் பயிற்சி முடித்த 400 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் உள்ள நாகேஷ் பேரக்சில் நேற்று நடைபெற்றது. இதில் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி கமாண்டெண்ட் பிரிகேடியர் பங்கஜ் பி.ராவ் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக சத்திய பிரமாணம் எடுக்கும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த வீரர்கள் அனைவரும் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.

இதையடுத்து பிரிகேடியர் பங்கஜ் பி.ராவ் பேசும்போது, இளம் ராணுவ வீரர்கள் கடுமையான பயிற்சியை முடித்து உள்ளனர். இவர்களது பயிற்சி இந்திய தேசத்துக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. எதிரிகளை தோற்கடிக்கும் போர் குணம் இவர்களுக்கு உண்டு. இவர்களது எதிர்காலம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து சத்திய பிரமாணம் எடுத்த வீரர்களின் அணிவகுப்பை கட்டளையிட்டு நடத்திய 5 முதன்மை வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதுநிலை மற்றும் இளநிலை ராணுவ அதிகாரிகள், சத்திய பிரமாணம் எடுத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story