பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பா.ம.க. யாரிடமும் பேசவில்லை அன்புமணி ராமதாஸ் பேட்டி


பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பா.ம.க. யாரிடமும் பேசவில்லை அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2018 11:15 PM GMT (Updated: 22 Dec 2018 4:52 PM GMT)

பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி யாரிடமும் பேசவில்லை என்று கோவையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கோவை,

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஈரோடு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடங்களை உள்துறை மந்திரியோ, பிரதமரோ பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது தமிழகத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை வெளியிடுவோம்.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதில் சாத்தியகூறுகள் இல்லை. எனவே பழைய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்துவதாக அறிவிப்பார்கள். அதற்கான நிதி அரசிடம் உள்ளதா என தெரியவில்லை. தகுதியான சட்டம் மற்றும் சாட்சியங்களை சேகரித்து ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும். உயர்மின் கோபுரம் தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்துவது நியாயமானது. முதலில் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழகத்தில் ஆராய்ச்சி மையங்களை மூடக்கூடாது. கணினிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 விசாரணை முகமைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு இதை செயல்படுத்துவதாக கூறுவதில் நம்பிக்கை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story