பெரம்பலூரில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் தொடங்கப்படும் ஜகோர்ட்டு நீதிபதி தகவல்


பெரம்பலூரில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் தொடங்கப்படும் ஜகோர்ட்டு நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 4:53 PM GMT)

பெரம்பலூரில் கூடுதலாக குற்றவியல் நீதிமன்றம் தொடங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தின் பணிச்சுமையை குறைக்க அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான புகழேந்தி தலைமை தாங்கி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

பின்னர் அவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நீதிமன்றத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்து நீதிமன்ற பணியை தொடக்கி வைத்தார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேசியதாவது:-
மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ள பெரம்பலூரில் நீதித்துறையில் முன்னணி மாவட்டமாக மாற்ற தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாக அமையப்பெற்றுள்ளது. மேலும் வக்கீல்களின் ஆயுதமாக கருதப்படும் சட்டபுத்தகங்களை படிப்பதற்கு நீதிமன்ற வளாகத்தில் நூலகம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நூலகத்தை அனைத்து வக்கீல்களும் முறையாக பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்கு சரியான நீதி கிடைக்க முன்வர வேண்டும். வக்கீல்கள் அனைவரும் வாதங்களின் போது சட்ட நுணுக்கங்களை முறையாக எடுத்துரைக்கும் போது, நீதிபதிகள் சரியான தீர்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக அமையும்.

நீதிமன்றத்தின் பணிச்சுமையை குறைக்க பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக குற்ற வியல் நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படும். நீதித்துறையை பொருத்த வரை நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள். அதனடிப்படையில் மூத்த வக்கீல்கள் அனைவரும் தங்கள் பெயரை நிலை நிறுத்தும் வகையில் அடுத்த தலைமுறை வக்கீல்களை வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மகிளா நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதிபதி முரளதரன், சார்பு நீதிபதி ஸ்ரீரிஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், மோகனப்பிரியா, வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் முகமது இலியாஸ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நன்னை கிராமத்தை சேர்ந்த நல்லம்மா என்கிற மூதாட்டி அங்கும், இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை திறந்துவைப்பதற்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி காரில் வந்து நீதிமன்றம் முன்பு இறங்கினார். அப்போது அவரை நீதிபதிகள், வக்கீல்கள் வரவேற்று கொண்டிருந்தனர். திடீரென்று மூதாட்டி நல்லம்மா நீதிபதியிடம் தனது கோரிக்கை குறித்து முறையிட ஓடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஓடி சென்று நல்லம்மாவை மீண்டும் பிடித்து கொண்டனர். அப்போது நல்லம்மா கூறுகையில், நீர்நிலையின் புறம்போக்கு இடத்தில் இருந்த என்னுடைய வீட்டை அதிகாரிகள் அகற்றி விட்டனர். ஆனால் மற்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இன்னும் அகற்றவில்லை. இது தொடர்பாக நீதிபதியை சந்தித்து முறையிட வந்ததாக தெரிவித்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

Next Story