பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை தொடங்கியது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கூடும். இங்கு காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால் நாமக்கல் நகர் மட்டும் இன்றி சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போதே கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது. கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து கரும்புகளை வாங்கி வரும் வியாபாரிகள் சந்தையில் விற்பனைக்காக அடுக்கி வைத்து உள்ளனர். இவற்றை சந்தைக்கு வரும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி சுவைக்கின்றனர்.
இந்த கரும்பு அவற்றின் தரத்தை பொறுத்து ஜோடி ரூ.30 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் கரும்பு விளைச்சல் குறைவாக இருப்பதாகவும், இருப்பினும் அவற்றின் விலை உயரவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் போது கரும்பின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story