விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் 6-வது நாளாக போராட்டம்


விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் 6-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 5:37 PM GMT)

பென்னாகரம் அருகே விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் நேற்று 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம்,

விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கப்படுவதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எட்டியாம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்ட பந்தல் முன்பாக விவசாய சங்கத்தினர் உயர் மின்கோபுர பதாகைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவை அளிப்பது போலவும், அதை கிழித்து குப்பையில் போடுவது போலவும் விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உயர் மின்கோபுர பதாகைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அன்பு தீர்த்தகிரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், அன்பு, ஓய்வு பெற்ற ஆசிரியர் முனிரத்தினம் மற்றும் விவசாயிகள், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story