ஆத்தூர் அருகே வேன் மோதி பொக்லைன் டிரைவர் சாவு பிறந்த குழந்தையை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பியபோது பரிதாபம்
ஆத்தூர் அருகே, ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய பொக்லைன் டிரைவர் வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஓட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ரகு (வயது 29). பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி சுரேகா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுரேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 1 மணி வரை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் ரகு வீட்டுக்கு திரும்பினார்.
ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம் புறவழிச்சாலையில் அவர் சென்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சுற்றுலா வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த ரகு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது உடலை குழந்தைகளுடன் மனைவியும், உறவினர்களும் பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story