கோத்தகிரியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 14½ பவுன் நகைகள் கொள்ளை 4 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோத்தகிரியில், பட்டப்பகலில் வீடு புகுந்து 14½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற 4 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் வேதமுத்து(வயது 65). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேதமுத்து ஆலயத்துக்கு சென்று விட்டார். மதியம் 12 மணியளவில் அவரை பார்க்க விஜயா சென்றார். பின்னர் அங்கிருந்து சிறிது நேரம் கழித்து விஜயா வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் லாக்கரில் இருந்த 14½ பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டை நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது:-
பீரோ லாக்கரில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை எடுக்கவில்லை. மேலும் அவசரத்தில் எடுக்கும்போது, 2½ பவுன் நகையை கீழே சிதறவிட்டு சென்றுள்ளனர். மேலும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு பீரோவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மாற்று சாவி வைத்தே வீட்டின் உரிமையாளர் பீரோவை திறந்துள்ளார்.
காமராஜர் சதுக்கம் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். அதில் 4 பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சந்தேகப்படும் இடங்களில் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டப்பகலில் வீடு புகுந்து 4 பெண்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கோத்தகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story