நெல்லை அருகே செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்


நெல்லை அருகே செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2018 3:30 AM IST (Updated: 23 Dec 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

நெல்லை, 

நெல்லை அருகே செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

திருவாதிரை திருவிழா

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 11 மணிக்கு சுவாமி அழகிய கூத்தர் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து 11.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோவிலை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள 4 ரதவீதிகளிலும் தேர் அசைந்து வந்து மீண்டும் நிலையை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, அதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, 3 மணிக்கு சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவிலில் கடந்த 14-ந் தேதி மார்கழி திருவாதிரை திருவிழா தொடங்கி தினமும் திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது. நேற்று இரவு விடிய, விடிய கோவில் 2-வது பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு தீபாராதனையும், 4 மணிக்கு நடராஜர் திருநடனக்காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இதேபோல் பல்வேறு சிவன் கோவில்களில் இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை, மாலை வேளைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று காலை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேர் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு, நான்கு ரதவீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது.

இதில் கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, ஆறுமுகநயினார் சைவ மரபினர் மகமை செயலாளர் திருமலைக்குமார், கோவில் ஊழியர்கள் கணேசன், வீரகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story