உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் இன்று முதல் உண்ணாவிரதம்
உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகின்றனர்.
சுல்தான்பேட்டை,
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில் விளைநிலம் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள மாநிலத்தை போல சாலையோரங்களில் கேபிள் அமைத்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 இடங்களில் கடந்த 17-ந் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கோவை மாவட்ட விவசாயிகள் சுல்தான்பேட்டையில் பந்தல் அமைத்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடந்த 6-வது நாள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்து பேசினார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காத்திருப்பு போராட்டம் தொடங்கி இன்றுடன் (நேற்று) 6 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 7-வது நாளான நாளை (இன்று) முதல் விவசாயிகள் சுல்தான்பேட்டை உள்பட அனைத்து காத்திருப்பு போராட்ட மையங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சுல்தான்பேட்டையில் காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story