கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்


கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்
x
தினத்தந்தி 23 Dec 2018 3:30 AM IST (Updated: 23 Dec 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் வழங்கினார்.

கடலூர், 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு கணினி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் நடைபெற்றது. இதற்கு நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கலா தலைமை தாங்கினார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரும், மாவட்ட பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளருமான டாக்டர் கீதா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியும், மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவு அலுவலருமான ராஜகிருபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்குரிய பிறப்பு சான்றிதழை அதன் பெற்றோரிடம் வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹபீசா, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்லீலா, பிறப்பு, இறப்பு மாவட்ட இணைப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு தலைமை மருத்துவமனை, அரசு வட்ட மருத்துவமனை, அரசு வட்டம் சாரா மருத்துவமனை ஆகியவற்றில் நிகழும் பிறப்பு, இறப்புக்கு உரிய சான்றிதழை நகர்புறமாக இருந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்திலும், ஊரக பகுதியாக இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திலோ பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு வீண் சிரமம் ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில் மேற்படி மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு, இறப்புக்கு உரிய சான்றிதழ்களை அந்தந்த அரசு மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(நேற்று) கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இனி அரசு தலைமை மருத்துவமனையில் நிகழும் பிறப்பு, இறப்புகளை இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான சான்றிதழ்களை அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story