தஞ்சை-நாகை இருவழிச்சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது எப்போது? டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு


தஞ்சை-நாகை இருவழிச்சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது எப்போது? டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 8:21 PM GMT)

பாதியில் நிறுத்தப்பட்டு 1 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சை-நாகை இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது எப்போது? என டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்,

தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய ஆன்மிக தலங்களையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும் திருவாரூரில் பழமை வாய்ந்த தியாகராஜர் கோவில், கூத்தனூரில் கலைமகள் சரஸ்வதிக்கு தனி கோவில் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சனி பகவானுக்கு உரிய தலமான திருநள்ளாறு கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

இதனால் தினமும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்வது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலையாக மாறியுள்ள நிலையில் இன்னும் ஒரு வழிப்பாதையாகவே தஞ்சை-நாகை சாலை இருந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நான்கு வழிச்சாலையாக மாற வேண்டிய நிலையில் இந்த திட்டம் பல்வேறு இடையூறுகளால் தடைப்பட்டது. இந்த வழிப்பாதையில் திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் இருந்து கொரடாச்சேரி வரை 5 ரெயில்வே கேட்டுகள் அமைந்துள்ளன.

இந்த சாலை மிக குறுகிய சாலையாக இருப்பதால், வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தஞ்சை-நாகை வரையிலான 79 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச்சாலை அமைக்க ரூ.396 கோடி நிதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கீடு செய்தது. இந்த பணியினை ஒரு ஒப்பந்த நிறுவனம் தொடங்கியது. திருவாரூர் எல்லையான கோவில்வெண்ணியில் இருந்து கொரடாச்சேரி வரையில் ரெயில்வே பாதையை கடக்காமல் மாற்று பாதையில் இருவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த வழிப்பாதையில் வெட்டாறு, வெண்ணாறு குறுக்கே 3 பாலங்களை கட்ட வேண்டிய நிலையில் 2 பாலத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு(2017) டிசம்பர் மாதம் பணிகளை முடிக்க நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் 30 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இதில் கோவில்வெண்ணியில் இருந்து கொரடாச்சேரி வரையிலும், திருவாரூரில் இருந்து நாகை வரையிலான சாலை பணிகள் முற்றிலும் நடைபெறாமல் உள்ளது.

தஞ்சையில் இருந்து திருவாரூர் வரையில் உள்ள பழைய சாலை பகுதி மட்டுமே விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதிலும் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலை அரைகுறை வேலைகளால் பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு 1 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பலரும் இந்த சாலையை பயன்படுத்த அச்சப்பட்டு மன்னார்குடி வழியாக தஞ்சை செல்லும் நிலை இருந்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் தஞ்சையில் தான் அமைந்து உள்ளது. ஆனால் இந்த அலுவலகத்தின் அனைத்து செயல்பாடுகளும் டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் எந்த தகவலையும் பெற முடியாமல் உள்ளது. இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இந்த சாலை பணிகள் நடைபெறாததால் தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்கள், பெரும்பாலான சரக்கு வாகனங்கள் அனைத்தும் மன்னார்குடி சென்று பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று அதன்பின்னரே நாகப்பட்டினம் சென்று வருகின்றன. இதனால் கூடுதல் பணம் செலவாவதுடன், நேரமும் விரயம் ஆகிறது. கஜா புயலினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ள திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் இந்த சாலை பிரச்சினையால் மேலும் அவதியடைந்து வருகின்றனர்.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் இருந்தும் யாரும் தஞ்சை-நாகை சாலை பற்றி குரல் கொடுக்கவில்லை. ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் பிரச்சினை, மீத்தேன் போன்ற திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு உணவு அளிக்கும் பூமியாக இருந்து வரும் திருவாரூர், நாகை மாவட்டங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங் களால் அழிவை சந்தித்து வருகிறது.

இதில் அடிப்படை தேவையான சாலை வசதி கூட இல்லாமல் புறக்கணிக்கப்படுவதால் டெல்டா மாவட்ட மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தஞ்சை-நாகை இருவழிப்பாதை சாலை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story