மன்னார்குடியில் லாரி மோதி மாணவி படுகாயம் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மன்னார்குடியில் லாரி மோதி மாணவி படுகாயம் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 8:25 PM GMT)

மன்னார்குடியில் லாரி மோதிய விபத்தில் மாணவி படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகள் கீர்த்தனா (வயது 13). இவர் மன்னார்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை சைக்கிளில் மாணவி கீர்த்தனா பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளிக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது தஞ்சையில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி கீர்த்தனா மீது மோதியது. தொடர்ந்து அருகில் இருந்த கொடிக்கம்பத்தின் மீது லாரி மோதி நின்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கீர்த்தனாவை பொதுமக்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே நடராஜபிள்ளை தெருவில் பள்ளி செல்லும் பகுதியில் வேகத்தடை இல்லாததால் தான் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது உடனே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வேகத்தடை அமைப்பதாக உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-தஞ்சை சாலையில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story