இருபோக சாகுபடிக்கு முறைவைத்து தண்ணீர் வழங்க வேண்டும் பெரியாறு பாசன விவசாயிகள் கோரிக்கை


இருபோக சாகுபடிக்கு முறைவைத்து தண்ணீர் வழங்க வேண்டும் பெரியாறு பாசன விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2018 9:41 PM GMT (Updated: 22 Dec 2018 9:41 PM GMT)

தண்ணீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டு இருபோக சாகுபடிக்கு முறைவைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று பெரியாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா பயணியர் விடுதியில் பெரியாறு பாசன கால்வாய் விவசாயிகள் சங்கக்கூட்டம் திட்டக்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:-

பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் இருபோக சாகுபடி செய்து வருகிறோம். தற்போது முதல்போகம் முடிந்து 2-ம் போக சாகுபடி விவசாயப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை மற்றும் பெரியாறு அணையில் தண்ணீர் கொள்ளளவு தேவைக்கு அதிகமாக இருந்ததால் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய், சிவகங்கை பாசன பகுதியில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தநிலையில் தற்போது வைகை, பெரியாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருபோக சாகுபடிக்கு மார்ச் மாதம் முதல் வாரம் வரை தண்ணீர் தேவை உள்ளது. எனவே இருபோக சாகுபடி விவசாயிகளின் நிலையை கருத்தில்கொண்டு ஒருபோக சாகுபடி பணிகள் நிறைவு பெற்றதாலும், மற்ற கால்வாய்களுக்கு செல்லும் தண்ணீரால் கண்மாய்கள் நிரம்பியதாலும் தண்ணீரின் சிக்கனம் கருதி இருபோக சாகுபடிக்கு மட்டும் முறைவைத்து பங்கீட்டு தண்ணீர் வழங்க வேண்டும்.

அதன்படி 1 முறைக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் கொடுக்க வேண்டும். இதனால் இருபோக சாகுபடி முழுமைபெறும். அனைத்து விவசாயிகளும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story