சாமானிய மக்களின் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


சாமானிய மக்களின் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 22 Dec 2018 9:50 PM GMT (Updated: 22 Dec 2018 9:50 PM GMT)

சாமானிய மக்களின் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

மானாமதுரை,

மானாமதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், கலெக்டர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மானா மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியம், ஏழை பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விவசாயிகளுக்கான உபகரணங்கள், தையல் எந்திரம், விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கான நிதிஉதவிகள் வழங்கப்பட்டன.

மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட 363 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 36 லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் பேசும்போது, வைகை ஆற்று பாசன விவசாயிகளின் நலன் கருதி முதல்-அமைச்சரிடம் வைகையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் வைகையில் தண்ணீர் திறக்கப்படும் என்றார். அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழக அரசு சாமானிய மக்களின் அரசாக செயல்படுகிறது.

ஏழை மக்களின் நம்பிக்கையை பெற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர் என்றார். இதில் நகர செயலாளர் விஜிபோஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விளத்தூர் நடராஜன், பேரவை நிர்வாகி நமச்சிவாயம், முன்னாள் யூனியன் துணை சேர்மன் முத்துராஜா, புதுகுளம் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருப்புவனத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா வரவேற்றார். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- இந்த பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஏராளமான மனுக்களை கொடுத்துள்ளனர். இவை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி 15 நாட்களில் துறை வாரியாக தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்புவனத்தில் பஸ் நிலையம் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். கிராமப்புற பகுதியில் மின்விளக்கு, குடிநீர் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும். பள்ளிக் கல்வித்துறை மூலம் வருகிற ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் கொண்டு வரப்படும். இந்தாண்டு 250 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் புத்தகங்களை வழங்கினார்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள்துறை, வேளாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்பில் 220 பயனாளிகளுக்கு சுமார் ரூ.ஒரு கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், செந்தில்நாதன் எம்.பி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் புதுக்கோட்டையில் உள்ள அரசு பார்வையற்றோர் நடு நிலைப்பள்ளி மாணவிகள் டயாஸ்ரீ, ஜீவிதா ஆகியோர் அரசின் திட்டங்களை பாடியதால் அவர்களை அமைச்சர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜஹாங்கீர் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல இளையான்குடி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இளையான்குடி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளையான்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய பஸ்நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். திறமையான அறிவான மாணவர்களை உருவாக்க இந்த அரசு தொடந்து பாடுபடும் என்றார். இதில் மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, நிலவளவங்கி தலைவர் முருகன், தாயமங்கலம் அய்யாச்சாமி, குருசேகரன், அப்துல்குலாம் உள்பட கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story