கரூர் அருகே வேன் மோதி ரெயில்வே கேட் சேதம் போக்குவரத்து பாதிப்பு


கரூர் அருகே வேன் மோதி ரெயில்வே கேட் சேதம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:15 AM IST (Updated: 23 Dec 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே வேன் மோதிய விபத்தில் ரெயில்வே கேட் சேதமானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலாயுதம்பாளையம்,

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காசோழிபாளையத்தில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று காலை 6.45 மணியளவில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி “டீ கார்டன்“ எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதையொட்டி மாங்காசோழிபாளையம் ரெயில்வே கேட்டினை, கேட் கீப்பர் அடைத்தார். பின்னர் ரெயில் சென்றதும், மெல்ல மெல்ல அந்த ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அப்போது அங்கு இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தன. அப்போது மூர்த்திபாளையத்தில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக வந்த வேன் ஒன்று அதிவேகமாக வந்து, ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் ரெயில்வே கேட்டு உடைந்து சேதமடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும், கேட் கீப்பர் உடனடியாக கரூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கிருந்து வேறு ரெயில்கள் ஏதும் இயக்கப்படாமல் முன்எச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்திற்குள்ளான வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கு நின்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் ரெயில் நிலைய ஊழியர்கள் அங்கு வந்து சேதமடைந்த ரெயில்வே கேட்டை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் தற்காலிகமாக அந்த வழியாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சிறிது நேரத்தில் அந்த ரெயில்வே கேட் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில்வே கேட்டை சேதப்படுத்திய வேன் டிரைவர் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 31) என்பவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story