டிராக்டர் மீது மொபட் மோதி கூலித்தொழிலாளி பரிதாப சாவு டிரைவர் கைது
கந்தம்பாளையம் அருகே நின்ற டிராக்டர் மீது மொபட் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கந்தம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு கணேசன், இவரது மாமியார் அருக்காணி (60), மைத்துனர் மகள் சவுமியா (12), மகன் ஸ்ரீராம் (10) ஆகியோர் ஒரே மொபட்டில் கருக்கம்பாளையத்தில் இருந்து அருணகிரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை கணேசன் ஓட்டி சென்றார்.
எம்.கே.பள்ளம் என்ற இடத்தில் வந்த போது மொபட் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது வேகமாக மோதியது. இதில் கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேரும் காயம் இன்றி தப்பினர்.
படுகாயம் அடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கூலித் தொழிலாளி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோலாரத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் நல்லதம்பி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story