திருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகள் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது ரூ.10 லட்சம் தங்கக்கட்டிகள் மீட்பு
திருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகள் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.10 லட்சம் தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டது.
ஜீயபுரம்,
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள திண்டுக்கரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பரிமளம்-சத்யபாமா தம்பதி. பரிமளம் இறந்து விட்டார். இவர்களுக்கு ரமேஷ்(வயது 37), கவுரிசங்கர்(32) ஆகிய 2 மகன்கள். இவர்களில் கவுரிசங்கர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பூனாட்சியின் மகள் ஜெயந்தியை (27)திருமணம் செய்துள்ளார். ரமேஷின் மனைவி மைதிலி.
இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி ரமேஷ், மனைவி மைதிலி மற்றும் குழந்தைகளுடன் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். வீட்டின் முதல் தளத்தில் கவுரிசங்கரும், ஜெயந்தியும் படுத்திருந்தனர். கீழ் தளத்தில் ரமேஷின் தாயார் சத்யபாமா மட்டும் படுத்திருந்தார்.
அன்றைய தினம் இரவு, வீட்டின் பின்புறம் வழியாக வந்த கொள்ளையர்கள் கடப்பாரையால் பின்பக்க கதவை நெம்பி உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் ஒரு அறையில் சத்யபாமா படுத்திருந்ததால் மற்றொரு அறைக்கு நைசாக சென்ற கொள்ளையர்கள், அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 96 பவுன் நகை களை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இவற்றின் மதிப்பு ரூ.19 லட்சம் ஆகும்.
இந்த கொள்ளை குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமராஜன்(ஜீயபுரம்), செந்தில்குமார்(ராம்ஜிநகர்) மற்றும் போலீஸ் ஏட்டுகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கொள்ளையர்கள் குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. தொடர்ந்து புலன்விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முக்கொம்பு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, மூவரும் முன்னாள் அமைச்சர் பூனாட்சியின் மகள் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.கைதானவர்கள் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை சேர்ந்த கீரிப்பிள்ளை என்ற ஆறுமுகம்(46), செல்வராஜ்(45) மற்றும் இன்னொரு ஆறுமுகம்(48) ஆவர். அவர்கள் மீது ஏற்கனவே திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தன்று இரவு, மூவரும் ஜெயந்தியின் வீட்டு பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக நடந்து வந்துள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் சென்று கதவை கடப்பாரையால் நெம்பி உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக மூவரும் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும் கொள்ளையடித்த நகைகளை, தங்கக்கட்டியாக உருக்கி விற்றதும் தெரியவந்தது. தற்போது போலீசார் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கட்டிகளை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மூவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story