மாவட்டத்தில் வனத்துறையினருக்கு ‘வாக்கி-டாக்கி’ வழங்கப்படுமா?
தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு வனத்துறையினருக்கு டிஜிட்டல் ‘வாக்கி-டாக்கி’ வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தின் மேற்குப்பகுதி இயற்கை வனப்பகுதியாகவும், கிழக்குப்பகுதி மேகமலை வன உயிரின சரணாலயமாகவும் உள்ளது. இங்கு தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட அரிய வகை மரங்களும், யானை சிறுத்தை, காட்டுப்பன்றிகள், மர அணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை மூலிகைகளும் உள்ளன.
இதனால் வனப்பகுதியில் தனிக்குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். வனத்துறையினருக்கு போதுமான தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் வனப்பகுதியில் குற்றச்செயல்கள் ஏதும் நடந்தால், உடனே தகவல்களை பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடுவதும், மரங்களை வெட்டி கடத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியில் வேட்டைக்கு சென்றவர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்து கடத்தினர். அவர்களை கேரள வனத்துறையினர் கைது செய்தனர். கேரள வனத்துறையினர் கைது செய்யும் வரை தமிழக வனத்துறைக்கு யானை இறந்த தகவல் 5 நாட்களாக தெரியாமல் இருந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
தமிழக வனத்துறையில் காடு, மலைகளில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள ‘வாக்கி-டாக்கி’ பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்காக ஆங்காங்கே தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ‘அனலாக் விஎச்எப்‘ முறையில் தகவல்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், குறைந்தபட்சம் 25 மீட்டர் தூரத்துக்கு கூட தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் இருந்து வந்ததால் பெரும்பாலான ‘வாக்கி-டாக்கி’கள் வனத்துறையில் பயன்படுத்தப்படாமல், முடங்கிவிட்டன.
இதையடுத்து வனத்துறையை நவீனப்படுத்தும் நோக்கில் வனப்பகுதியில் விலங்குகள் வேட்டை, மரங்களை வெட்டுவதை தவிர்க்கும் பொருட்டு கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் ‘வாக்கி-டாக்கி’கள் வழங்கப்பட்டன. இந்த டிஜிட்டல் ‘வாக்கி-டாக்கி’கள் செல்போனுக்கு இணையாக தகவல் பரிமாறும் வகையிலும் செயற்கைகோள் மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கோவை மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே தேனி மாவட்ட வனப்பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு தகவல் பரிமாற்றத்திற்கு வனத்துறையினருக்கு டிஜிட்டல் ‘வாக்கி-டாக்கி’ வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story