நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 24 Dec 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை நீலாயதாட்சியம்மன் காயாரோகணசாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி நடராஜருக்கு நேற்றுமுன்தினம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சிறப்பு ஹோமங்களும், ருத்ராபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர் ஆகியோருக்கு சுந்தரவிடங்க தியாகராஜர் வலது பாத தரிசனம் காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பாத தரிசனம் செய்தனர்.

இதேபோல நாகையில் உள்ள அமரநந்தீஸ்வரர் கோவில், மலையீஸ்வரன் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர் கோவில், கட்டியப்பர் கோவில், அக்கரைக்குளம் காசிவிஸ்வநாதர் கோவில், அழகர் கோவில், வீரபத்ரசாமி கோவில், நடுவதீஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில், கீழையூர் சிவன் கோவில், வடக்கு பொய்கைநல்லூர் சிவன் கோவில், தகட்டூர் பைரவர் கோவிலில் உள்ள சிவன் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நடராஜருக்கு நேற்று மார்கழி மாத திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அப்போது நடராஜருக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து காசிவிஸ்வநாதர் கோவில், வள்ளலார் கோவில், புனுகீஸ்வரர் கோவில் என்பன உள்ளிட்ட சிவன்கோவில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களை கொண்டு சாமி அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story