“எங்கள் குடும்பத்தினரை ராமதாஸ் தரப்பினர் துன்புறுத்துகிறார்கள்” - காடுவெட்டி குருவின் தாய் பேட்டி


“எங்கள் குடும்பத்தினரை ராமதாஸ் தரப்பினர் துன்புறுத்துகிறார்கள்” - காடுவெட்டி குருவின் தாய் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2018 5:00 AM IST (Updated: 24 Dec 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

எங்கள் குடும்பத்தினரை, ராமதாஸ் தரப்பினர் துன்புறுத்துகிறார்கள் என்று காடுவெட்டி குருவின் தாய் கூறினார்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி வன்னியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், வி.ஜி.கே.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூரில் தொடங்கிய ஊர்வலம் எலந்தங்குடி, பேச்சாவடி வழியாக மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து காடுவெட்டி குருவின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என பா.ம.க.வினர் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் ஊர்வலம் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பா.ம.க. கொடியை பயன்படுத்தாமல் வன்னியர் சங்க கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டனர். இதுகுறித்து காடுவெட்டி குருவின் தாய் கல்யாணி அம்மாள், வழுவூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வன்னியர் சங்க தலைவராக இருந்த எனது மகன் குருவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதை செய்யவில்லை.

ராமதாசை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவரை சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர். ராமதாஸ் தரப்பினர் என்னை அடித்து கையை உடைத்தனர். எனது மகளையும் தாக்கினர்.

எங்கள் குடும்பத்தினரை, ராமதாஸ் தரப்பினர் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். கட்சிக்காக பாடுபட்ட எனது மகன் வாழ்க்கையே முடிந்துவிட்டது. ஆனால் எங்களை தொடர்ந்து துன்புறுத்துவதோடு அவமானப்படுத்தவும் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், காடுவெட்டி குருவின் தங்கை செல்வராணி, குருவின் மருமகன் மனோஜ்கிரண், வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய வன்னியர் சங்கம் தொடங்குவோம் - காடுவெட்டி குருவின் உறவினர் பேட்டி


மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஜி.கே.மணிகண்டன். இவர் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் உறவினர் ஆவார். காடுவெட்டி குருவின் மறைவுக்கு பிறகு இவர், பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார். நேற்று மயிலாடுதுறையில் நடந்த காடுவெட்டி குருவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிகண்டன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குருவின் குடும்பத்துக்கு உதவி செய்ததால் என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 1-ந் தேதி அவருடைய குடும்பத்தார் ஆதரவுடன் காடுவெட்டியில் புதிதாக வன்னியர் சங்கத்தை தொடங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story