கஜா புயலால் பாதிப்பு: “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” - விவசாயிகள் வேதனை


கஜா புயலால் பாதிப்பு: “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 23 Dec 2018 11:00 PM GMT (Updated: 23 Dec 2018 11:00 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளையாக வளர்த்த “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் வீடுகள், மரங்கள், நெல், வாழை, மக்காச்சோளம், வெற்றிலை கொடிக்கால் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

ஏராளமான ஏக்கர் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் தென்னை மரங்கள் முறிந்து காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் எண்ணற்ற தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தென்னை மரங்களை அகற்ற அரசின் உதவி கிடைக்காததால், அழுகிய நிலையில் இருக்கும் மரங்களால் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க அவற்றை சில விவசாயிகள் வயலில் தீயிட்டு அழித்துவருகின்றனர். இந்தநிலையில் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள நம்பி வயல் பகுதி விவசாயிகள், பிள்ளையை போல் வளர்த்த, சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை எரிக்க மனமில்லாமல் வேதனையுடன் வயல்களிலேயே அவற்றை துண்டு துண்டுகளாக வெட்டி பொக்லின் எந்திரம் மூலமாக புதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த சிவா என்கிற தென்னை விவசாயி கூறுகையில், பெரும் இழப்பு என்றாலும், உரத்திற்காக வாவது பயன்படட்டும் என்பதற்காகத்தான் பிள்ளைகளாக வளர்த்த சாய்ந்து விழுந்த எங்கள் தென்னம் பிள்ளைகளை மண்ணில் புதைக்கிறோம். அறிவித்த நிவாரணத்தொகையை அரசு உடனே வழங்கினால் மட்டுமே எங்களால் பாதிப்பில் இருந்து மீள முடியும். மேலும், மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேதனையுடன் கூறினார்.


Next Story