விழுப்புரம் நகை கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது - 20 பவுன் மீட்பு
விழுப்புரம் நகை கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் நேற்று காலை விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பழனிமகன் நடராஜ் (வயது 35) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில், விழுப்புரம் கணபதி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளரான கோவிந்தராஜ் (49) என்பவர் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில் அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த நடராஜ், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 40 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நடராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நடராஜை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான நடராஜ் மீது விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்பட 17 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story