தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை வழங்க அரசு நிதி ஒதுக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை வழங்க அரசு நிதி ஒதுக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2018 10:45 PM GMT (Updated: 24 Dec 2018 7:11 PM GMT)

தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை வழங்க அரசு நிதி ஒதுக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் என கம்பைநல்லூரில் நடந்த விழாவில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

மொரப்பூர்,

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கம்பைநல்லூர் பஸ் நிலைய மேற்கூரை அமைக்கவும், ரூ.6 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தர்மபுரி எம்.பி. டாக்டர். அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் காளிதாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் ஊராட்சி தலைவர் இமயவர்மன், முன்னாள் கவுன்சிலர் அரசாங்கம், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் வரவேற்றார்.

விழாவில் டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் அதிகம் வறட்சி பாதித்த பகுதி தர்மபுரி மாவட்டம் ஆகும். அரசு இந்த மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர ரூ.400 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி 10 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று உள்ளோம். இவற்றை முதல்-அமைச்சரிடம் நேரில் வழங்கி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைப்பேன். விவசாய மக்களின் நலன் காக்க இத்திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும். இத்திட்டங்களை செயல்படுத்தும் வரை தொடர்ந்து போராடும்.

8 வழிச்சாலை பயனில்லாத திட்டம். அதனால் அவற்றை பா.ம.க. எதிர்க்கிறது. இதற்கு பதிலாக வாணியம்பாடி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் பா.ம.க மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இச்சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும். காவிரி ஆறு பாயும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினர்கள் மதியழகன், சின்னசாமி, நிர்வாகிகள் சொல்லின் செல்வர், முன்னாள் தலைவர் முருகன், சேட்டு, பசுவராஜ், சபரி, ராணிபலராமன், சரவணன், வன்னியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Next Story