நத்தம் அருகே வகுப்பறை கட்டிடம் கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
நத்தம் அருகே பள்ளிக்கு கட்டிடம் கேட்டு கலெக்டர் டி.ஜி.வினயிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். அதன்படி, நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், லிங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2009-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், 10 வருடங்களாகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் பெரும்பாலான மாணவர்களை மரத்தடியில் அமர வைத்தே பாடம் நடத்துகின்றனர். மேலும், கழிப்பறை வசதியில்லாததால் மாணவிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். எனவே, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல ஏ.வெள்ளோடு அருகே உள்ள மங்களாபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்களது ஊரில் சுமார் 500 பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் வரவில்லை. ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டார் பழுதாகிவிட்டது. காவிரி குடிநீர் அருகே உள்ள கிராமங்களுக்கு மட்டும் வருகிறது. இதேபோல, எங்களுக் கும் காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல ம.மூ.கோவிலூர் அருகே உள்ள வன்னியப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு கடந்த 1 வருடமாக குடிநீர் வராததால் மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம். குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதேபோன்று சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அதிகாரிகள் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் மற்றொரு தரப்பினர் நடத்திய திருவிழாவில் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களது கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆவிளிபட்டி எஸ்.சி. காலனி பொதுமக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் திருசித்தன் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் பஞ்சமி நிலத்தில் நின்ற புளியமரங்களை வெட்டி கடத்தி வரும் ஊராட்சி எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கேபிள் டி.வி.க்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் கேபிள் டி.வி. கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக் கப்படுவார்கள். எனவே ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story