பணிநிரந்தரம் குறித்து அறிவிக்காததை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தம் - மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு


பணிநிரந்தரம் குறித்து அறிவிக்காததை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தம் - மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:15 AM IST (Updated: 25 Dec 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

பணிநிரந்தரம் குறித்து அறிவிக்காததை கண்டித்து இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மூவலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜா.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் முத்துப்பாண்டி, மாநில துணை செயலாளர் மோகன், தஞ்சை மாவட்ட செயலாளர் ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் ராஜா.ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் மின் சீரமைப்பு பணியில் கலந்து கொண்டு பணியாற்றினால், முதல்-அமைச்சரிடம் பேசி ஒப்பந்த ஊழியர் பணியை நிரந்தரம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று மின்சார துறை அமைச்சர் தங்கமணி வாக்குறுதி அளித்தார். இதனையேற்று கஜா புயல் மின் சீரமைப்பு பணியை சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால், ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டும் மின்சார துறை அமைச்சர், ஒப்பந்த தொழிலாளர் குறித்து பேசாதது வேதனை அளிக்கிறது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கஜா புயல் சீரமைப்பு பணியில் இருக்கும் தொழிலாளர்களும், உற்பத்தி, பகிர்மானம், தொடரமைப்பு பிரிவுகளில் பணிபுரியும் தமிழகத்தின் அனைத்து ஒப்பந்த மின்வாரிய தொழிலாளர்களும், பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வரும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story