கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - புயல் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை


கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - புயல் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2018 4:45 AM IST (Updated: 25 Dec 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். புயலில் சேதமடைந்துள்ள கூரை வீடு, ஓட்டு வீடு, தொகுப்பு வீடு உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

கிராமப்புறங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதியில் உள்ள வேலூர், ஆலத்தம்பாடி, கச்சனம், அம்மனூர், கோமல், மணலி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.


Next Story