மாவட்ட செய்திகள்

புயல் பாதிப்பை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறி தஞ்சையில், 3 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல் + "||" + Claiming that the authorities are trying to cover the impact of the storm Villagers in Thanjavur, 3 places Road stroke

புயல் பாதிப்பை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறி தஞ்சையில், 3 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல்

புயல் பாதிப்பை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறி தஞ்சையில், 3 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல்
புயல் பாதிப்பை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி தஞ்சையில், 3 இடங்களில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சாய்ந்த மரங்கள், சேதம் அடைந்த வீடுகள், இறந்த கால்நடைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு நிவாரண தொகை, பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.


இந்த நிலையில் தஞ்சை ஒன்றியத்தில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், கொல்லாங்கரை, வடக்குப்பட்டு, வல்லுண்டாம்பட்டு, சூரியம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதிப்புகள் ஏதும் இல்லை என கூறி தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்தும், புயல் பாதிப்பை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியும் தஞ்சையை அடுத்த மருங்குளம் 4 சாலை சந்திப்பில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சை ஒன்றியத்தையும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, புயலால் பாதிக்கப்பட்ட சோளம், தென்னை, தேக்கு, முந்திரி, நெல், கரும்பு, வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கைகளில் சேதமடைந்த நெற்பயிர்களை வைத்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாசில்தார் அருணகிரி, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய் கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதை ஏற்று கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் தஞ்சை-கறம்பக்குடி, வல்லம்-ஒரத்தநாடு சாலையில் காலை 9 மணி முதல் 12 மணி வரை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரத்திலும், திருக்கானூர்பட்டி 4 சாலை சந்திப்பிலும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் தாசில்தார், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.