பெற்றோர் பிரித்து விடுவார்கள் என நினைத்து விஷம் குடித்து காதலி தற்கொலை - காதலனுக்கு தீவிர சிகிச்சை
துடியலூர் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துடியலூர்,
கோவை கவுண்டம்பாளையம் அசோக்நகர் மேல் பகுதியில் வசித்து வருபவர் தாமஸ். இவரது மகள் தர்ஷினி என்கிற விஜயதர்ஷனி (வயது 21). இவர் கோவை உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபி என்கிற விஜய் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து உள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது.
காதலுக்கு இருவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் காதல் ஜோடி இதை நம்பவில்லை. தங்களை பெற்றோர் பிரிந்து விடுவார்கள் என்று எண்ணி வருத்தம் அடைந்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடி கடந்த 17-ந் தேதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷம் குடித்தது. அவரவர் வீடுகளில் மயங்கிய நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று தர்ஷினி என்கிற விஜயதர்ஷனி பரிதாபமாக இறந்தார். அபி என்கிற விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story