பேரூர் அருகே பயிர்களை நாசம் செய்து காட்டு யானைகள் அட்டகாசம்
பேரூர் அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்தன.
பேரூர்,
கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி பச்சாபாளையம், தீத்திபாளையம், குப்பனூர், கரடிமடை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில் வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தீத்திபாளையம் கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த நில நாட்களுக்கு முன் பெருமாள் சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மிதித்து நாசம் செய்தன.
பின்னர் இந்த காட்டு யானைகள் அங்கிருந்த வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி வீசியது. காட்டு யானைகளின் சத்தம் கேட்டு காவலாளி அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் மீண்டும் இந்த பகுதிக்குள் புகுந்தது. பின்னர் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்தன. மேலும் தென்னை மரங்களை கீழே சாய்த்தன. பின்னர் நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் காட்டு யானை சென்று விட்டன.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, தீத்திபாளையம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு வனத்துறை போதிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் காட்டு யானைகள் வனத்தை விட்டு ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story