கல்லால் தாக்கி கொத்தனார் கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கல்லால் தாக்கி கொத்தனார் கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:57 AM IST (Updated: 25 Dec 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே கல்லால் தாக்கி கொத்தனாரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரவக்குறிச்சி,

திண்டுக்கல் மாவட்டம், திருக்கூர்ணம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 27). கொத்தனார். இவருக்கு திருமணமாகி காயத்ரி (22) என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் வாங்கலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது மனைவியிடம், கூறி விட்டு, மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கூர்ணத்தில் இருந்து புறப்பட்டு வந்தார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அரவக்குறிச்சி அருகே கரூர்-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள மணல்மேடு கிராமத்தில் உள்ள தனியார் பேக்கரி கடையின் பின்புறம் மணிகண்டன் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை அடித்து கொலை செய்த மர்மநபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story