தனியார் பஸ் மோதி விபத்து படுகாயம் அடைந்த விவசாயிக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு - கும்பகோணம் கோர்ட்டு உத்தரவு
தனியார் பஸ் மோதி நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயிக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது68). இவருடைய தம்பி ராஜசேகரன்(58). இவர் விவசாயி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி தனது வயலுக்கு சென்று விட்டு சாக்கோட்டை முனீஸ்வரன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், ராஜசேகரன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவருடைய வலது கால் துண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ராஜசேகரனின் அண்ணன் குணசேகரன், நாச்சியார்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ராஜசேகரனுக்கு, இழப்பீடு வழங்கக்கோரி கும்பகோணத்தில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில், குணசேகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராஜசேகரனுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க தஞ்சை நேஷனல் இன்சூரன்சு நிறுவனத்துக்கு நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story