கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2018 11:30 PM GMT (Updated: 25 Dec 2018 9:34 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கேக் வழங்கி ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடினர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்குதந்தைகள் லாரன்ஸ், பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நேற்று காலையில் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ், உதவி பங்குதந்தை அருள்சுந்தர் ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நடந்தது.

இதையொட்டி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை ஏசு தொட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதன் முன்பாக கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தை ஏசுவை வணங்கி சென்றனர். விழாவையொட்டி கிறிஸ்து அரசர் ஆலயம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாலையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

நாமக்கல்-சேலம் சாலையில் அமைந்துள்ள அசெம்பிளி ஆப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த ஆராதனைக்கு தலைமை போதகர் நாதன் தலைமை தாங்கினார். இந்த ஆராதனைக்கு பிறகு ஏசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து சிறுவர், சிறுமிகள் நாடகம் நடைபெற்றது.

இதேபோல் நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையில் போதகர் மனோவா தலைமையில் நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கணேசபுரம் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்பட நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டி.வி.எஸ். மேடு பகுதி புனித அந்தோணியார் ஆலயத்தில் நள்ளிரவு நடந்த பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.பி. காலனியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை நடந்தது. தார்காடு ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏசுவின் பிறப்பை குறிக்கும் குடில், கிறிஸ்துமஸ் மரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு நடந்த திருப்பலி மற்றும் நேற்று காலையில் கிறிஸ்துமஸ் திருவிழா திருப்பலியை ராசிபுரம் பங்குத்தந்தை ஆர்.ஜெயசீலன் நிறைவேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாலையில் புனித லூர்து ஆலயத்திற்கு வந்து மெழுகுவர்த்தி ஏந்தி வணங்கினார்கள்.

அதேபோல் ராசிபுரத்தில் உள்ள மற்ற கிறிஸ்தவ தேவாலயங்களிலும், காக்காவேரி, புதுப்பாளையம், குமாரபாளையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


Next Story