2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை: கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் கிளிஜோதிடரை கொன்ற வாலிபர் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
வாலிபரிடம் இருந்து கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் திருப்பூரில் கிளிஜோதிடரை கொலை செய்ய காரணம் என்பது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதி புதூர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (வயது 40). திருப்பூர் பார்க்ரோடு மாநகராட்சி பூங்காவின் முன்புறம் அமர்ந்து கிளிஜோதிடம் பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் சாப்பாடு வாங்குவதற்காக பென்னிகாம்பவுண்ட் பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேசை திடீரென்று சரமாரியாக வெட்டினார். இதில் ஜோதிடர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதன்பின்னர் அந்த ஆசாமி தான் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை அங்கு வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துண்டு பிரசுரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளியை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் நெல்சன், பிச்சையா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் கொலையாளியை தேடிவருகின்றனர். மேலும் கொலையாளி யார்? என்று தனிப்படை போலீசார் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண் விவகாரத்தில் ரமேசை, நாகை மாவட்டம் குத்தாலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரகு (34) என்பவர் வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது பற்றிய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குத்தாலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து, இங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த திருமணமான 32 வயது பெண் ஒருவரும் வேலைபார்த்து வந்தார்.
இந்தநிலையில் ரகுவுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் அழகில் மயங்கிய ரகு, அந்த பெண்ணை எப்படியாவது மனைவியாக்கி கொள்ள வேண்டும் என்று துடியாய் துடித்துள்ளார். இந்த ஆசை அவருடைய மனதில் நாளுக்குநாள் அதிகமானது.
இந்த நிலையில்தான், திருப்பூர் பார்க் ரோட்டில் கிளி ஜோதிடம் பார்த்து வரும் ரமேஷ் என்பவர், பெண்களை வசியம் செய்வதில் கை தேர்ந்தவர் என்று அவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ரமேசிடம் சென்ற ரகு, “தனது மனதில் ஆசை கனலை வளர்த்த அந்த பெண்ணை வசியம் செய்து ஆசை நாயகியாக்கி தன்னுடன் வாழ வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்காக குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்ட ரமேஷ், அந்த பெண்ணின் மனதை மாற்றி ரகுவிடம் பழகவைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரகுவிற்கும், அந்த பெண்ணிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணும், ரகுவும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளை மீட்டுத்தரக்கோரி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை ரகுவிடம் இருந்து பிரித்து அவருடைய கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மிகவும் மனவேதனையில் ரகு இருந்து வந்துள்ளார்.
தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் புழுவாய் துடித்த ரகு, மீண்டும் அந்த பெண்ணுடன் வாழ வேண்டும் என்று விரும்பினார். அதற்காக கிளிஜோதிடரான ரமேசை நாடி மீண்டும் வந்துள்ளார். அப்போது தன்னை விட்டு அந்த பெண் பிரிந்து சென்றுவிட்டார் என்றும், இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்காக ஜோதிடர் ரூ.2 ஆயிரத்தை ரகுவிடம் இருந்து வாங்கியதாக தெரிகிறது.
ஆனால் அந்த பெண் இருக்கும் இடத்தை தெரிவிக்காமல் ரமேஷ் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இது ரகுவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவ்வப்போது ஜோதிடரை சந்தித்த ரகு அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். காலப்போக்கில் ரமேசின் நடவடிக்கை மீது ரகுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.
கள்ளக்காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததுடன், அவளுடன் ரமேஷ் தொடர்பில் இருக்கலாமோ? என்ற சந்தேகமும் ரகுவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடுவம்பாளையம் பகுதியில் ரமேசை இரும்பு கம்பியால் ரகு தாக்கியுள்ளார். இது தொடர்பாக மங்கலம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தில் இருவரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.
கள்ளக்காதலி பிரிந்து சென்ற ஏக்கத்திலும், அவளுடன் கிளிஜோதிடருக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்திலும் ஆத்திரத்தில் இருந்த ரகு, நேற்று முன்தினம் மதியம் ரமேசை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் ரகுவை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரகு காரைக்காலில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி 2 தனிப்படைகளும் காரைக்காலுக்கு நேற்று விரைந்தனர். விரைவில் கொலையாளி கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story