வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
விஜயா வங்கி, தேனா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது. பிராந்திய கிராம வங்கிகளை இணைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் காலதாமதம் செய்வதை தவிர்க்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் ஏற்கனவே கடந்த 21-ந் தேதி வங்கி அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 41 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் பணியில் இல்லாததால் அடைக்கப்பட்டிருந்தது. வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை.
வங்கிகளுக்கு நேரில் வந்து பணம் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களும், வியாபாரிகளும் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் அவர்களில் பலர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் மூலம் பணம் எடுத்து கொண்டதும், பணம் போடும் எந்திரம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ததையும் காணமுடிந்தது. இதனால் அங்கு அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் சில ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரிகளின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று மட்டும் வங்கிகளில் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 44 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் 212 ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்ததை காணமுடிந்தது.
Related Tags :
Next Story