ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற 4 பேர் கைது 2 சொகுசு கார்கள் பறிமுதல்


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற 4 பேர் கைது 2 சொகுசு கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:00 PM GMT (Updated: 26 Dec 2018 5:27 PM GMT)

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற 4 பேர் ஊத்துக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊத்துக்கோட்டை, 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் அருகே உள்ள ரெப்பாலபட்டு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமாஞ்சநேயலு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 சொகுசு கார்கள் நிற்காமல் வேகமாக சென்றன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 கிலோமீட்டர் தூரம் ஜீப்பில் துரத்தி சென்று ஊத்துக்கோட்டை அருகே சொகுசு கார்களை மடக்கி பிடித்தனர்.

காரில் இருந்து தப்பி ஓட முயன்ற 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 34), செம்பரம்பாக்கத்தை சேர்ந்த புகழேந்தி (30), கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிரபு (35), உசேன் (28) என்பது தெரியவந்தது.

சொகுசு கார்களில் சோதனை செய்தபோது 3 டன் எடை கொண்ட 44 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.15 லட்சமாகும். போலீசார் செம்மரக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். செம்மரக்கட்டைகளை ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

Next Story